துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகளுக்காக ரூ.2¼ கோடி ஒதுக்கீடு செயல் இயக்குனர் தகவல்


துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகளுக்காக ரூ.2¼ கோடி ஒதுக்கீடு செயல் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகளுக்காக ரூ.2 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று செயல் இயக்குனர் வி.சந்திரசேகரன் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் வேளாண்மை துறையின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வரும் மின்மோட்டார், நீர்த்தேக்க தொட்டி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாடு முகமையின் செயல் இயக்குனர் வி.சந்திரசேகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல்பட்டு வருகிறது. இந்த முகமையின் கீழ் பிரதம மந்திரி விவசாய நீர் பாசனத்திட்டத்தில் ஒரு துளிநீரில் அதிக பயிர் என்ற மத்திய, மாநில அரசு திட்டத்தில் துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம், நீர்பாசன குழாய்கள் வாங்க ரூ.10 ஆயிரம், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை குழாய் அமைக்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு ரூ.2 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதி ஒதுக்கீட்டினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு 2-ம் தவணைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர் வரவேற்றார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் முடிக்கப் பெற்ற பயனாளிகளுக்கு பின்னேற்பு மானியத்திற்கான காசோலைகளை செயல் இயக்குனர் சந்திரசேகரன் வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜசேகர், வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற்பொறியாளர் ரகுநாதன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி பொறியாளர் சுவாமிநாதன், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செயல் இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் வேளாண்மை துறையினர் திருவண்ணாமலை மற்றும் துரிஞ்சாபுரத்தில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறு, நீர்த்தேக்க தொட்டி, இணைப்பு குழாய்கள், மின்மோட்டார்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் மற்றும் துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்து, அனைத்து விவசாயிகளும் திட்டத்தின் கீழ் முழுமையாக பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story