பர்கூர் அருகே விபத்து: லாரி-மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி 3 பேர் படுகாயம்; 100 ஆடுகள் செத்தன


பர்கூர் அருகே விபத்து: லாரி-மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி 3 பேர் படுகாயம்; 100 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 17 Feb 2019 10:15 PM GMT (Updated: 17 Feb 2019 4:57 PM GMT)

பர்கூர் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 100 ஆடுகள் செத்தன.

பர்கூர், 

நாமக்கல் மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் குமரேசன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிகொண்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் (27), ராமசாமி மகன் பழனி (32) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக ஆடுகளை ஏற்றி வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற சத்யராஜ், பழனி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

மேலும் ஆடுகளை ஏற்றி சென்ற லாரியும் நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த குமரேசன், அய்யர், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த சத்யராஜ், பழனி, குமரேசன், அய்யர், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே சத்யராஜ், பழனி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். குமரேசன், கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அய்யர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story