மூலனூர் அருகே 100 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


மூலனூர் அருகே 100 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 9:03 PM GMT)

மூலனூர் அருகே 100 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுபாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதி உணவு பாதுகாப்பு (பொறுப்பு) ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் வெள்ளகோவில்–மூலனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அந்தகாரை அதிகாரிகள், நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் டீத்தூள் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மொத்த எடை 22 கிலோவாகும். இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை விசாரித்தபோது மூலனூர் அருள்ஜோதி நகரை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 42) என்றும், அவர் டீத்தூளை மொத்தமாக வாங்கி அவற்றை வீட்டில் பாக்கெட் செய்து கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு வினியோகம் செய்வது தெரியவந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் அலுவலர்கள், அருள்ஜோதி நகரில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ¼ கிலோ, ½ கிலோ, 1 கிலோ கொண்ட பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அவை கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உயர் ரக டீத்தூள் வாங்கி அவற்றுடன் மட்ட ரக டீத்துளை கலந்து, பாக்கெட்டுகளில் அடைத்து அவற்றை மளிகை கடை மற்றும் பேக்கரிகளில் வினியோகம் செய்தது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மூலனூர் வந்து, ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 100 கிலோ கலப்பட டீத்துளை பறிமுதல் செய்தார். பின்னர் அவற்றில் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய ஆய்வு அறிக்கை வந்த பின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது ‘‘ உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உடனே 94440–42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்’’ என்றனர். மூலனூர் அருகே வீட்டில் கலப்படி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story