ஈரோட்டில் துணிகரம் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகை–பணம் திருட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலைவீச்சு
ஈரோட்டில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள திண்டல் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 70). ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணம் ஆகி அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருமணம் ஆகி சென்னையில் உள்ளார்.
கடந்த 17–ந் தேதி ராஜன் தன்னுடைய மகனை பார்ப்பதற்காக சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஈரோடு வந்தார். அதைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள அலமாரி மற்றும் பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.11 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜன் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். போலீசார் விசாரணையில், ராஜன் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது, 3 மர்ம நபர்கள் 2 மோட்டார்சைக்கிளில் வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்றது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.