ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது
x
தினத்தந்தி 23 Feb 2019 5:11 AM IST (Updated: 23 Feb 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வீடியோ படம் எடுத்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

பல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் டிக்–டாக் செயலி தடைசெய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆங்காங்கே சிலர் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி சந்திரன்(வயது40). இவர் தங்களது ஊரில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்தப்படவுள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 18–ந் தேதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து மனு கொடுத்துள்ளார்.

மனு கொடுத்துவிட்டு திரும்பும் காட்சியை போலீஸ் நிலையத்தின் பின்னணியில் செல்போனில் பதிவு செய்து அதில் சினிமா பாடலுடன் இணைத்து ‘டிக்–டாக் வீடியோ‘ வெளியிட்டு இருக்கிறார். இது பரபரப்பினை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டு இருப்பதாக வன்னியம்பட்டி போலீஸ் நிலைய போலீஸ்காரர் காளிராஜன் புகார் கொடுத்தார். வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.


Next Story