கோவை கலெக்டர் திடீர் சோதனை ஆதிதிராவிடர் விடுதியை பராமரிக்காத வார்டன் பணியிடை நீக்கம்


கோவை கலெக்டர் திடீர் சோதனை ஆதிதிராவிடர் விடுதியை பராமரிக்காத வார்டன் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 9:46 PM GMT)

ஆதிதிராவிடர் விடுதியில் சோதனை நடத்திய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, விடுதியை முறையாக பராமரிக்காத வார்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை,

கோவை பாலசுந்தரம் ரோட்டில் ஆதி திராவிடர் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு 174 மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இந்த விடுதியில் வார்டன், 3 சமையல்காரர்கள், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புரவு பணியாளர் என்று 6 பேர் வேலை செய்து வருகிறார்கள். ஆனாலும் இந்த விடுதி முறையாக பராமரிக்கப்பட வில்லை என்றுகூறி ஏற்கனவே பலமுறை மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியின் சமையல்கூடம், மாணவர்கள் தங்கி இருக்கும் அறை, கழிவறை, விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதியிலும் கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், விடுதி முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து விடுதி வளாகத்தை முறையாக பராமரிக்காமலும், தனது பணியினை சரிவர மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

மேலும் விடுதியை 2 நாட்களுக்குள் முறையாக சீர் செய்யுமாறும் மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story