சென்னையில் காதலிக்க மறுத்த பெண் ஊழியருக்கு கத்திக்குத்து உடன் வேலை பார்த்த அதிகாரி வெறிச்செயல்


சென்னையில் காதலிக்க மறுத்த பெண் ஊழியருக்கு கத்திக்குத்து உடன் வேலை பார்த்த அதிகாரி வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:00 AM IST (Updated: 25 Feb 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் காதலிக்க மறுத்த பெண் ஊழியரை அவரது சக அதிகாரி கத்தியால் குத்தினார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 24). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்தார். அதே அழகுநிலையத்தில் மேலாளராக வேலை பார்த்த விக்டர் (41) என்பவர் சரண்யா மீது ஆசை கொண்டார். சரண்யாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. விக்டருக்கும் திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். ஆனால் மனைவி, குழந்தையை அவர் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதனால் சரண்யா மீது ஆசைபட்டு அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.

தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்றும், உங்கள் காதலை ஏற்க முடியாது என்றும் சரண்யா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சரண்யாவை மறக்கமுடியாமல் விக்டர் தொடர்ந்து சரண்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் பகலில் தான் வேலை பார்த்த அழகு நிலையத்தில் சரண்யா இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த விக்டர் மீண்டும் தனது காதலை சரண்யாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். சரண்யா விக்டரிடம் கோபமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்டர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த சரண்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விக்டர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Next Story