ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு, நடைபாதை ஆக்கிரமிப்பு கலெக்டர் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஒவ்வொரு கடைகளாக பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா எனவும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடிய வகையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறதா எனபது குறித்து நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:– தமிழ்நாடு முதல்–அமைச்சரின் உத்தரவின்படி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் வாரியாக மொத்தம் 37 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், அனைத்து விதமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வியாபாரிகளிடமும், கடைகளுக்கு வரும் பெரும்பான்மையான பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை குறித்த விழிப்புணர்வு உள்ளது. பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கினை தவிர்த்து பேப்பர்கள், வாழை இழைகளில் பொட்டலமாக வழங்குவதை காணமுடிகிறது. இது ஆரோக்கியமான மாற்றமாகும். பூக்கடைகளை ஆய்வு செய்த போது வியாபாரிகள், மூங்கில் கூடைகள் மற்றும் பனை ஓலை பெட்டிகள் பயன்படுத்தி வருவது பாராட்டுக்குரியதாகும். இந்த நிலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்தால் நிச்சயமாக பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தவிர்க்கப்படும். மேலும் பொதுமக்கள் சிரமப்படாதவாறு ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பஸ் நிலையத்தினை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், நகராட்சி உதவி பொறியாளர் சுப்பிரமணியபிரபு, ஆய்வாளர் ஹரிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.