குலசேகரத்தில் தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் மறியலால் பரபரப்பு


குலசேகரத்தில் தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு;  பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 8:07 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரத்தில் தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குலசேகரம்,

குலசேகரம் காவஸ்தலம் சந்திப்பில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் மாமூடு சந்திப்பு, கல்லுப்பாலம் பகுதி, வெண்டலிகோடு, அண்டூர் ஆகிய இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் பழுதடைந்த சாலையை சீரமைக்க ரூ.3.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். சாலையை சீரமைக்கும் பணியை ஆற்றூரை சேர்ந்த ஒருவர் ஒப்பந்தம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

அந்த சாலையில் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் மாணவ–மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிலர் திடீரென நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்தனர். நள்ளிரவில் போடப்பட்ட சாலை தரமற்ற நிலையில் இருந்ததால், அதில் வாகனத்தில் சென்றவர்கள் விழுந்து விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் குலசேகரம் மாமூடு சந்திப்பு பகுதிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர், அவர்கள் இரவோடு இரவாக தரமற்ற சாலையை போட்டதை கண்டித்தும், தரமான சாலையை அமைக்கக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு ஆதரவாக தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய கட்சியினரும் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் மற்றும் நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இரவில் போடப்பட்ட தரமற்ற சாலையை பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்திவிட்டு தரமான சாலையை பகலில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் தரமான சாலையை பகலில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் அங்கு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story