வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 8 March 2019 11:00 PM GMT (Updated: 8 March 2019 5:34 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் முன்பு பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி ஓய்வின்றி 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதனால்தான் நாடு பாதுகாப்பாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு சென்று நட்புறவை வளர்த்துக் கொண்டதால்தான், சிறைபிடிக்கப்பட்ட நமது விமானி அபிநந்தனை உடனே விடுவிக்குமாறு அனைத்து நாடுகளும் பாகிஸ்தானை வலியுறுத்தின. இது தெரியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இதுவரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது. ஆனாலும் அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு விட்டு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு ம.தி.மு.க. தயாராகி விட்டது.

தி.மு.க.வினர் பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நாம் ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம். இதுவரையிலும் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, நானும் இந்து பிராமணர் என்று கூறி வேஷம் போடுகிறார்.

மத்திய அரசு சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. அ.தி.மு.க. அரசு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. இவ்வாறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்கும்.

பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், திருப்பூரில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். தற்போது சென்னையிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நகரங்கள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளன. நான் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை பட்டியலிடுகிறேன். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலினால் பட்டியலிட முடியுமா?

தி.மு.க. தலைவராக இருந்தபோது கருணாநிதி தமிழ் மொழியை வளர்ப்பதாக கூறிக்கொண்டு கனிமொழியைத்தானே வளர்த்தார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது, தினமும் ஒரு ஊழல் என்று வெளிவந்து கொண்டே இருந்தது.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, மக்களுக்கு ரூ.1 நிதி ஒதுக்கீடு செய்தால், அதில் 15 பைசாதான் முறையாக சென்று சேர்கிறது. மீதி பணம் மற்றவர்களுக்கு செல்கிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டார். அதனை பிரதமர் நரேந்திரமோடி மாற்றி காண்பித்தார். இதனால் மத்திய அரசு மக்களுக்கு வழங்கும் நிதியானது அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக சென்று விடுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி போன்று ஒரு பிரதமர் வேட்பாளரை எதிர்க்கட்சியால் காண்பிக்க முடியுமா? எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Next Story