உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்


உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்
x
தினத்தந்தி 12 March 2019 10:15 PM GMT (Updated: 12 March 2019 7:39 PM GMT)

உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை காந்திசாலையில் இருந்த பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த மாநகராட்சி அலுவலகம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்திலும், கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்திலும் தற்போது தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

தஞ்சை மாநகராட்சியானது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக தஞ்சையில் 14 இடங்களில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணிக்கான பூஜை நேற்று நடைபெற்றது. இதை அறிந்த விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாநகர செயலாளர் வெற்றி, தி.மு.க. வார்டு செயலாளர் அப்துல்ரகுமான் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரக்கிடங்கு இந்த இடத்தில் அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு குப்பைகளால் நிரம்பிவிட்டது. அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் மாநகரின் மையப்பகுதியான கீழவாசலில் உரக்கிடங்கு வைத்தால் இந்த பகுதியில் மக்கள் எப்படி வசிக்க முடியும்.

குறைந்த வாடகை கட்டணத்தில் ஏழை மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் அதையே உரக்கிடங்காக மாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவை கைவிட வேண்டும். ஊருக்கு வெளியே இதுபோன்ற உரக்கிடங்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story