திருக்கோவிலூர் அருகே, தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு


திருக்கோவிலூர் அருகே, தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2019 4:15 AM IST (Updated: 13 March 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே நடந்த தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. அந்த சமயத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 45). இவருடைய மனைவி நாவம்மாள். இவர் நேற்று மாலை கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவருடன் நாவம்மாள் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கியாஸ் அடுப்பில் எரிந்த தீ, கூரை வீட்டிற்கு பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் மனைவி, தீ... தீ... என்று கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ, பக்கத்தில் உள்ள தேவராஜன்(43), பூங்காவணம்(40), இளையராஜா, சங்கர் ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவி எரிந்தது.

இதனிடையே கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து, சிதறியது. இதனால் தீயணைத்துக்கொண்டிருந்த சிலர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கலியபெருமாள் தலைமையிான வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் 5 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.7 லட்சம் இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

Next Story