சொத்து பிரச்சினையில் விபரீதம் மகனிடம் இருந்து விஷத்தை பறித்து குடித்த விவசாயி சாவு உறவினர்கள் சாலை மறியல்


சொத்து பிரச்சினையில் விபரீதம் மகனிடம் இருந்து விஷத்தை பறித்து குடித்த விவசாயி சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 15 March 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

சொத்து பிரச்சினையில் தாக்கியதால் அவமானம் அடைந்து விஷம் குடிக்க முயன்ற மகனிடம் இருந்து பறித்த விஷத்தை குடித்த விவசாயி உயிரிழந்தார்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு கொட்டவெளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 55). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் காந்தி (65) என்பவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வயலில் நின்று கொண்டிருந்த கணேசமூர்த்தியின் மகன் பிரவின்குமாரை, காந்தி மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் தாக்கினர். இதனால் பிரவின்குமார், தனது தந்தை கணேசமூர்த்திக்கு போன் செய்து தன்னை தாக்கியது தொடர்பாக தெரிவித்து எனக்கு அவமானமாக உள்ளதால் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி அங்கு சென்று பிரவின்குமார் கையில் இருந்த விஷத்தை பறித்தார். பின்னர் அந்த விஷத்தை கணேசமூர்த்தி குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதை தொடர்ந்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மருதூர் நடேசதேவர் கடை பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story