கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் 6 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்


கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் 6 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்
x
தினத்தந்தி 20 March 2019 4:00 AM IST (Updated: 20 March 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

14 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 6 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

பெங்களூரு,

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், கர்நாடகத்தை பொறுத்தவரையில் இந்த தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது.

ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தல் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் தேர்தல் அதிகாரிகள் ஆவார்கள். கலெக்டர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

பெங்களூருவை பொறுத்தவரையில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. பெங்களூரு வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகர கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி அலுவலங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று தொடங்கியது.

முதல் நாளில் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் செலுத்தவில்லை. தட்சிண கன்னடா, மண்டியா, பெங்களூரு தெற்கு ஆகிய ெதாகுதிகளில் தலா ஒருவரும், மைசூரு தொகுதியில் 3 பேரும் என மொத்தம் முதல் நாளான நேற்று 6 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர். அடுத்த ஓரிரு நாட்களில் மனுத்தாக்கல் செய்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story