சுருக்குவலை பிரச்சினை எதிரொலி, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை - படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு


சுருக்குவலை பிரச்சினை எதிரொலி, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை - படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

சுருக்குவலை பிரச்சினை எதிரொலியால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கடலூர், 

கடலூர் அருகே சாமியார்பேட்டை கடற்கரையோரம் புதுவையை சேர்ந்த 19 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த சாமியார்பேட்டை மீனவர்கள், அந்த 19 மீனவர்களையும் தட்டிக்கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் சாமியார்பேட்டை மீனவர்கள் சிறை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, தாசில்தார் சத்தியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் புதுவை மீனவர்களை விடுவித்தனர். 5 படகுகள் மட்டும் சாமியார்பேட்டை கடற் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்த புதுச்சேரி மீனவர்களை சிறைபிடித்த சாமியார்பேட்டை பகுதி மீனவர்களை கண்டித்தும், அவர்கள் மீது மீன் வளத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும் சுருக்கு வலைக்கு ஆதரவாக உள்ள மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தாழங்குடா உள்ளிட்ட பகுதியில் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மீனவ சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து மீன்வள துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்த புதுச்சேரியை சேர்ந்த 19 மீனவர்களை சாமியார் பேட்டை மீனவர்கள் சிறைபிடித்து, அவர்களின் 5 படகுகளையும் கரைக்கு கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் பேட்டை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுருக்குவலையை பயன்படுத்த ஆதரவு தெரிவிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அதேபோல் புதுச்சேரி மீனவர்களை சிறைபிடித்த மீனவர்கள் தரப்பினர், தாங்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால் எங்கே தங்களை மற்ற மீனவர்கள் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த தரப்பு மீனவர்களில் சிலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மேற்கொண்டு அவர்களுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக உரிய தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Next Story