தேவகோட்டையில் வாலிபர் வெட்டி கொலை 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


தேவகோட்டையில் வாலிபர் வெட்டி கொலை 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-27T01:11:25+05:30)

தேவகோட்டையில் வாலிபரை வெட்டிக் கொன்ற 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை நகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சேவுகன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஜெயராமனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஜெயராமன், அவருடைய மகன் பிரகாஷ் உள்பட சிலர் சேர்ந்து சேவுகனை தாக்கினார்களாம். இது குறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிரகாஷ் தனது நண்பர்கள் உள்பட 10 பேர் கொண்ட கும்பலுடன் சென்று, நடராஜபுரம் 3-வது வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த சேவுகனின் உறவினரான மாணிக்கம் மகன் பிரபு (வயது 26) என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

தகவலறிந்து வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு, குற்றவாளிகளை கைது செய்ய தனி போலீஸ் படை அமைத்தார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரபு வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்திருந்ததும், நாளை மறுநாள் வெளிநாட்டிற்கு செல்ல இருந்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இரு தரப்பினரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் முன் விரோதத்தில் பிரபு வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவான 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story