குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.
அதன்படி கடந்த சில வாரங்களாக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் குடிநீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று காலை முதல் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதில் பங்குபெறும் வீராணம் ஏரிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. வினாடிக்கு 50 கனஅடிக்கும் குறைவாக தண்ணீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 63.82 அடியாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்மட்டம் மளமளவென குறையும். கோடை மழை பெய்து அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்தால் மட்டுமே நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.