பா.ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


பா.ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 March 2019 11:15 PM GMT (Updated: 31 March 2019 10:17 PM GMT)

பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி பேசினார்.

காரைக்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சாக்கோட்டை ஒன்றிய அளவிலான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கேஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:– மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்க நடத்தப்படுவதே தேர்தல். தேர்தலில் போட்டியிடுபவர்கள், சொன்னதை செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி தேர்தல் காலங்களில் சொன்னதை ஆட்சிக்காலத்தில் செய்து காட்டியது. அதைப்போல தி.மு.க.வும் தேர்தலின் போது சொன்னதை செய்து காட்டியது. ஆனால் பா.ஜனதா அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட செயல்படுத்தவில்லை.

ஆனால் பணமதிப்பிழப்பு பற்றி சொல்லாததை செய்துள்ளனர். இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, எண்ணற்றோர் வேலை இழந்தனர், விலைவாசி உயர்ந்தது. தமிழ்நாட்டில் பகுத்தறிவு சுயமரியாதை என்ற புரட்சி விதையை விதைத்தவர் பெரியார். நீண்ட காலம் போராடி சாதி மதமற்ற நிலையை, தன்னுரிமைகளை, பெண்ணுரிமைகளை பெற்றுத் தந்தார். ஆனால் அதை அழிக்க நினைக்கிறது பா.ஜனதா அரசு. அவர் இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுப.துரைராஜ், சுந்தரம், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பெரியசாமி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப.சின்னதுரை, பள்ளத்தூர் ரவி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story