நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன் தம்பிதுரை வாக்குறுதி


நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன் தம்பிதுரை வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2019 10:45 PM GMT (Updated: 2 April 2019 8:27 PM GMT)

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் தம்பிதுரை அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அரவக்குறிச்சி,

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் தம்பிதுரை அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பப்பட்டி, குறிகாரன்வலசு, பெரியமஞ்சுவழி, புங்கம்பாடி மேல்பாகம்-கீழ்பாகம், ஈசநத்தம், நாகம்பள்ளி, கொடையூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் காமராஜரோடு காங்கிரஸ் ஆட்சி முடிந்து விட்டது. தி.மு.க.வுடன் காங்கிரஸ் சேர்ந்திருப்பது அவர்களுக்கு பின்னடைவு தான். தற்போது ஆளும் அரசாக உள்ள அ.தி.மு.க. மக்களின் கோரிக்கைகளை தேடி சென்று தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. அந்த வகையில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் மோடி ஆட்சி இருந்தால் தான் காவிரியில் உரிய முறையில் தண்ணீர் பெற வழிவகையாக இருக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என்பதால், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் எங்களுக்கு வாக்களித்து உங்களது ஆதரவினை தொடர்ந்து அளிக்க வேண்டும். அரவக்குறிச்சியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, தற்போது தி.மு.க.வுக்கு சென்று விட்டார். அவரால் தான் அரவக்குறிச்சி தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லாத நிலை உள்ளது. இதையெல்லாம் சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தம்பிதுரைக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் வாக்கு கேட்டு பேசுகையில், மக்களுக்கு யாரால் நல்லது செய்ய முடியும் என சிந்தித்து பாருங்கள். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வால் மட்டுமே மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். மற்ற கட்சியினர் தேர்தலில் வாக்குறுதியை மட்டும் தான் கொடுத்து விட்டு செல்வர். அதையெல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்றார். பிரசாரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நடிகரும், இயக்குனருமான லியாகத் அலி உள்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story