கூட்டுறவு, தேசிய வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை


கூட்டுறவு, தேசிய வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 10:30 PM GMT (Updated: 4 April 2019 5:21 PM GMT)

கூட்டுறவு, தேசிய வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிறு-குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மொடக்குறிச்சி, 

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு சிறு-குறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆதரவு தர முடிவெடுத்துள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி விளைபொருட்களுக்கு விலைநிர்ணயம் செய்யவேண்டும்.

கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும். 2016-17, 2017-18-க்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தவணைத்தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். விளைநிலங்களை விவசாயிகளின் அனுமதியில்லாமல் கையகப்படுத்த கூடாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசனத்துக்காக மானியத்தை சிறு-குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அணைகளில் உள்ள நீர் நிர்வாகம் அந்தந்த மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அணையில் இருந்து நீர் திறக்க கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கும்படி சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவதைப் போல சிறு-குறு விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். நெல் கிலோவுக்கு ரூ.25-ம், கொப்பரை தேங்காய் ரூ.100-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், பால் கொள்முதல் குறைந்த பட்சமாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து விவசாய மின் இணைப்புகளையும் மும்முனை மின்சாரமாக மாற்ற வேண்டும். ஈரோட்டில் மஞ்சள் வாரியமும், ராசிபுரத்தில் மரவள்ளிக்கிழங்கு வாரியமும் ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்கு மீதும், விவசாயிகள் பயன்படுத்தும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story