‘கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழகம் மாறி விட்டது’ நாகையில், வைகோ பிரசாரம்


‘கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழகம் மாறி விட்டது’ நாகையில், வைகோ பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-05T00:16:54+05:30)

‘கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழகம் மாறி விட்டது’ என்று நாகையில், வைகோ பிரசாரம் செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் திறந்த வேனில் நின்று பேசியதாவது:-

டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடிய மக்களின் தலையில் இடி விழுகிற மாதிரி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருக்கிறார் மோடி. நாகையில் 20, கடலூரில் 25 என மொத்தம் 45 இடங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறியது மோடி அரசு. அணை கட்டப்பட்டால் கிருஷ்ணசாகர் மற்றும் மேட்டூர், கல்லணை, கடைமடை உள்ளிட்ட எங்கும் தண்ணீர் வராது. அதானி, அம்பானி, வேதாந்தா ஆகிய கம்பெனிகள் விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவார்கள். பயிரிடுவதற்காக இல்லை. 8 ஆயிரம் அடி, 10 ஆயிரம் அடியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் வாயுக்களை எடுப்பதற்காக. இதனால் மத்திய அரசு மற்றும் கார்பரேட் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வரும். செழுமை அழிந்து விடும்.

கார்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழக அரசு மாறி விட்டது. கார்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கி இருக்கிறது. ரூ.8.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் கல்விக்கடனையும், பயிர் கடனையும் மோடி அரசு ரத்து செய்யவில்லை.

எனவே தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்தையும் ரத்து செய்வோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 80 லட்சம் பட்டதாரிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த வெளிநாட்டு கம்பெனிகள் எல்லாம் ஆளுங்கட்சியினர் கேட்ட கமிஷன் தொகையால் விட்டு விட்டு சென்று விட்டனர்.

அவர்கள் தொழில் தொடங்கி இருந்தால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு தமிழக அரசும் ஒரு காரணமாகி விட்டது. மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க கூடிய நெஞ்சுரம் இல்லாத அரசு, நீட் தேர்வை எதிர்க்க முதுகெலும்பில்லாத அரசு தமிழக அரசு. தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று தி.மு.க.வின் ஆட்சி மலரப்போகிறது. கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் சின்னாபின்னமானபோது மோடி நேரில் பார்வையிடவில்லை. டெல்டா மாவட்ட மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story