வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 7 April 2019 8:17 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 7 ஆயிரத்து 436 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்ட பயிற்சி கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள அறிவுரைகளின் படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தங்களது பணிகளை முழுமையாக அய்யமின்றி தெரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அன்னவாசல் ஆரியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியையும் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்காளர் சேவை மையம் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், தாசில்தார்கள் முருகப்பன், சதீஸ் சரவணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

Next Story