கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொழிலாளி பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொழிலாளி பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 April 2019 10:15 PM GMT (Updated: 9 April 2019 6:57 PM GMT)

முத்துப்பேட்டை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி பவுண்டடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரூபராஜ் (வயது 28). இவர் எடையூர் நெல் குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை ரூபராஜ் சங்கேந்தி மேட்டுக் கோட்டகம் சாலையில் உள்ள மின்னடி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமர கிளையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (முத்துப்பேட்டை), சிவதாஸ்(எடையூர்) ஆகியோர் ரூபராஜின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தூக்கில் தொங்கிய ரூபராஜின் கைகள் பின்புறமாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவரை யாராவது கொலை செய்து உடலை மரத்தில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அப்பகுதியில் ரூபராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ரூபராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூபராஜ் மரணம் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூக்கில் பிணமாக தொங்கிய ரூபராஜுக்கு திருமணமாகி ஒரு ஆண்குழந்தை உள்ளது.

கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தொழிலாளி ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தொங்கிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story