மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.23 அடியாக குறைந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.23 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 8:30 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.23 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அணை நிரம்பி காணப்பட்டது. அதன்பின்னர் மழை நின்று வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் குடிநீர் தேவையும் அதிகரித்தது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த மாதம் 31-ந் தேதி தண்ணீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த 7-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மேலும் குறைக்கப்பட்டு, வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர் வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 57.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57.23 அடியாக குறைந்தது.

இதே போல அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 59 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்த மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக நேற்று இரவு 7 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Next Story