திடீர் டீசல் கசிவால் பரபரப்பு: பரமக்குடியில் 3 மணி நேரம் ராமேசுவரம் ரெயில் நிறுத்தி வைப்பு பயணிகள் கடும் அவதி


திடீர் டீசல் கசிவால் பரபரப்பு: பரமக்குடியில் 3 மணி நேரம் ராமேசுவரம் ரெயில் நிறுத்தி வைப்பு பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 6:52 PM GMT)

திடீரென டீசல் கசிவு ஏற்பட்டதால் ராமேசுவரம்– சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் பரமக்குடியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பரமக்குடி,

 ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. வரும் வழியிலேயே ரெயிலின் என்ஜினில் இருந்து டீசல் கசிந்து கொண்டே வந்தது. கசிந்த டீசலானது என்ஜினுக்கு பின்புறம் உள்ள முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் உள்பட 9 பயணிகள் பெட்டிகளுக்கும் பரவியது. இதனால் ரெயில் பெட்டி முழுவதும் டீசல் வாசனை வீசியதோடு பெட்டிகளின் வெளிப்பகுதி கருப்பு நிறமாக மாறியது.

ரெயிலில் இருந்த பயணிகள் எங்கிருந்து இந்த வாசனை வருகிறது என தெரியாமல் ரெயில் என்ஜின் டிரைவரிடம் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து பரமக்குடி ரெயில் நிலையத்தின் அருகே வந்த போது மாலை 6.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலினை ரெயில் என்ஜின் டிரைவர் நிறுத்தி வைத்தார்.

தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் ராமேசுவரத்தில் இருந்து மாற்று என்ஜினை வரவழைக்க ஏற்பாடு செய்தனர். இரவு 9.45 மணி வரை ரெயில் புறப்படாமல் அங்கேயே நின்றது. இதனால் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.


Next Story