பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் கொண்டது; இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு


பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் கொண்டது; இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 8:30 PM GMT)

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் கொண்டது என இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ராணுவ விமானங்களை வாங்குவதில் உள்ள விதிமுறைகள் ரபேல் விமானங்கள் வாங்குவதில் கடைபிடிக்கப்படவில்லை. விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட 3 நீதிபதிகளுக்கு இந்திய கம்யூனிஸ்டு பாராட்டு தெரிவித்து கொள்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் அவரது பணியை நடிப்போடு நிறுத்திக் கொள்வது சிறந்தது. ஏனெனில் அவரது அரசியல் சார்பான கருத்துக்கள் மிகுந்த மனவேதனையை தருகிறது. பல கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து அவர் பேசாமல் பா.ஜ.க. வெளியிட்ட நதிகள் இணைப்பு குறித்து மட்டும் கருத்து சொல்கிறார். இதிலிருந்து அவர் பா.ஜ.க.வை ஆதரிக்கிறார் என தெரிகிறது. அவருக்கு உண்மையில் தைரியம் இருந்தால் நேரடியாக பா.ஜ.க.வை ஆதரிக்கிறேன் என சொல்லி இருக்கலாம். அதுதான் அரசியல் நேர்மை. அந்த அரசியலை தான் நடத்த வேண்டும். அதை விடுத்துவிட்டு நான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறேன் என சிக்னல் கொடுக்கிறார்.

பா.ஜ.க. முன்மொழிந்த அதே திட்டங்களை மற்ற கட்சிகளும் முன்மொழிந்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மட்டும் ரஜினிகாந்த் பாராட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. கங்கை–காவிரி இணைப்புக்கு ரஜினிகாந்த் முயற்சி செய்திருந்தால் கம்யூனிஸ்டு கண்டிப்பாக ஆதரவு அளித்து இருக்கும். அதைவிடுத்து விட்டு தேர்தல் நேரத்தில் இதுபோன்று அவர் கூறுவது அவரின் அரசியல் நேர்மையற்ற செயலை வெளிப்படுத்தியுள்ளது என்பதை கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story