சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்


சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 April 2019 4:00 AM IST (Updated: 14 April 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகத்துக்கு போக வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3–வது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 40 கிராமங்களை கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் என்.எல்.சி. 3–வது சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநெற்குணம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும், இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கோ‌ஷம் எழுப்பினர். மேலும் இதுதொடர்பான பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.

இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நேரத்தில் இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சேத்தியாத்தோப்பு வந்திருந்த இயக்குனர் கவுதமன், பெரியநற்குணம் கிராமத்துக்கு சென்றார். உடனே போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட அனுமதி கிடையாது. எனவே கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது தேர்தலுக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை என கவுதமன் தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3–வது சுரங்கம் அமைக்க இந்த பகுதியில் உள்ள கிராமங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம் என இந்த பகுதி மக்கள் தெரிவித்தும், என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்–அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுத்தாக இதுவரை தெரியவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவிக்கின்றனர். மின்சார உற்பத்திக்கு பல வழிமுறைகள் இருந்தும் இந்த பகுதியில் உள்ள வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். என்.எல்.சி. நிர்வாகத்தை கையகப்படுத்த விட மாட்டோம்.

இவ்வாறு கவுதமன் கூறினார்.


Next Story