ரூ.2 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரி கைது


ரூ.2 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 5:51 PM GMT)

திருவள்ளூர் அருகே கடன் வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தினர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த நிதி நிறுவனம் அங்கு செயல்பட்டு வந்தது. இதை அறிந்த திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தண்ணீர் குளம், பெரியகுப்பம், மணவாள நகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் பெற அந்த நிதி நிறுவனத்தை நாடினார்கள்.

குறைந்த வட்டியில் கடன் பெற பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டினார்கள். இவ்வாறாக பொதுமக்கள் சுமார் ரூ.2 கோடி வரை அந்த நிதி நிறுவனத்தில் தங்கள் பணத்தை கட்டினார்கள். ஆனால் நிதி நிறுவனத்தினர் கடன் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு தப்பிச்செல்ல முயன்ற 2 பேரை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அந்தோணி (வயது 29) மற்றும் மணி என்கிற சிவப்பிரகாஷ் (31) ஆகியோரை கடந்த 3-ந் தேதி கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா மண்டையூர் கிராமத்தை சேர்ந்த அந்த நிதி நிறுவனத்தின் பொதுமேலாளர் பிரீத்தி என்கிற சிவசங்கரி (36) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் திருச்சி, மதுரை உத்தங்குடி, சிவகங்கை, ஓசூர், கிருஷ்ணகிரி, கரூர், சேலம் போன்ற பல இடங்களில் இதே போன்று போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கைதான பிரீத்தி என்கிற சிவசங்கரியை நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சிவகங்கையை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் செபஸ்டின் மற்றும் திருச்சியை சேர்ந்த வேதகிரி என்கிற கணேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story