அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. - கனிமொழி எம்.பி. பேட்டி


அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. - கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 11:15 PM GMT (Updated: 14 April 2019 10:45 PM GMT)

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட மிகப்பெரிய தலைவர் அம்பேத்கர். அவருக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். திராவிட இயக்கமும், தி.மு.க.வும் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி வழியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது வழியிலே நாங்களும் பின்தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story