பருவமழை குறைந்ததால் வறட்சியில் சிக்கித்தவிக்கும் வேலூர் மாவட்டம் காசுகொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்


பருவமழை குறைந்ததால் வறட்சியில் சிக்கித்தவிக்கும் வேலூர் மாவட்டம் காசுகொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 2:20 PM GMT)

பருவமழை குறைந்ததன் காரணமாக அணைகள், ஏரிகள் வறண்டு வேலூர் மாவட்டம் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. குடிநீரை காசுகொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர், 

குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதில் மழை முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு மழையை பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் நிலத்தடி நீராதாரத்தை பெருக்குவதோடு, நீர் வழங்கும் திட்டங்களின் ஆதாரங்களை மேம்படுத்தி, தொடர்ந்து அடுத்த வடகிழக்கு பருவமழைவரை குடிநீர் வழங்குவதற்கு உதவுகிறது.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 2017–ம் ஆண்டு தென்மேற்கு பருவமழைகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் 152.59 மில்லி மீட்டர் மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 358.36 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. 2018–ம் ஆண்டு 212.46 மில்லிமீட்டர் தென்மேற்கு பருவமழையும், 88 மில்லிமீட்டர் வடகிழக்கு பருவமழையும் பெய்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வழக்கமாக 348.7 மில்லி மீட்டர் மழைபெய்யும். ஆனால் கடந்த 2018–ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 181.6 மில்லி மீட்டர் மழைமட்டுமே பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தைவிட 48 சதவீதம் குறைவாகும். இதனால் ஏரிகள், குளங்கள், நீர் ஆதாரங்கள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழைபற்றாக்குறை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீராதாரங்கள் விரைவாக குறைந்து கோடைகாலத்தில் மேலும் பாதிப்பு ஏற்படும்.

இந்த மழை குறைவு காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 24.57 அடி உயரம் கொண்ட ராஜாதோப்பு அணையில் தற்போது ஒருசொட்டு தண்ணீர்கூட இன்றி வறண்டு கிடக்கிறது. 37.72 அடி உயரம்கொண்ட மோர்தானா அணையில் 4.59 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதேபோன்று 26.24 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணையில் 13.25 அடி உயரம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 519 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வேலூர் மாவட்டத்தின் நிலத்தடிநீர் மட்டம் சுமார் 10 அடி குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் வருவதற்கு முன்பு வேலூர் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஓட்டேரி ஏரி வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் அளவு 48 சதவீதம் குறைந்ததன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலைகொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பேரணாம்பட்டு நகராட்சியில் 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். பேரணாம்பட்டு நகராட்சிக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆழ்துளை கிணறுகளை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது.

ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர்தண்ணீர் வினியோகம் செய்யவேண்டும். ஆனால் தற்போது 9 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து டிராக்டர்களில் தண்ணீர் கொண்டுவந்து ஒரு டேங் தண்ணீர் (2000 லிட்டர்) ரூ.600–க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு குடம் தண்ணீர் ரூ.5–க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைகொடுத்து தண்ணீர் வாங்குவதற்கும் போட்டாபோட்டி ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு காசுகொடுத்தும் தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி பயனற்று கிடக்கின்றன. பாலாற்றில் மணல் கொள்ளை காரணமாக தண்ணீரின்றி ஆங்காங்கே மரண பள்ளங்களாக காட்சியளிக்கினறன. விவசாய கிணறுகளிலும் தண்ணீர் இன்றி பெரும்பாலான இடங்களில் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன.

வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் 60 வார்டுகள் உள்ளன. 1.28 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் பாலாற்றில் இருந்து என ஒரு நாளைக்கு 53 மில்லியன் லிட்டர் (ஒரு மில்லியன் லிட்டர் என்பது 10 லட்சம் லிட்டர்) வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 8 வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. 35 வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒருமுறையும், மற்ற வார்டுகளில் 3 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இதனால் வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் இதுவரை குடிநீர் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சியின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பொன்னையாற்றில் இருந்தும், பாலாற்றில் இறைவன்காடு பகுதியில் இருந்தும் வேலூருக்கு தண்ணீர் சப்ளையாகும் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது. அதேபோன்று குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 16 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்துவிட்டால் வேலூர் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அடிக்கடி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story