வாக்காளர்களுக்கு பணம் தராமல் தேர்தலை சந்தித்தோம் மக்கள் நீதி மய்யம் அறிக்கை


வாக்காளர்களுக்கு பணம் தராமல் தேர்தலை சந்தித்தோம் மக்கள் நீதி மய்யம் அறிக்கை
x
தினத்தந்தி 20 April 2019 10:45 PM GMT (Updated: 20 April 2019 8:46 PM GMT)

புதுவை வாக்காளர்களுக்கு பணம் தராமல் தேர்தலை சந்தித்தோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பணநாயகத்தால்தான் நாட்டில் ஜனநாயகம் அழிந்து வருகிறது. இதை நன்கு உணர்ந்துள்ள கமல்ஹாசன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்து கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகின்றார். அந்த அடிப்படையிலேயே நடைபெற்ற நாடாளுமன்றதேர்தலை சந்திக்க வேண்டும் என்று என்னை போன்ற வேட்பாளர்களை தேர்வு செய்த பின்னர், உத்தரவும் பிறப்பித்து இருந்தார்.

அவரின் உத்தரவினை ஏற்று புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டோம். மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்றும் பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் முழங்கினோம். வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய்கூட பணம் ஏதும் தராமல் தேர்தலையும் சந்தித்தோம்.

இதனாலேயே இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் அதிக அளவில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்ததாக பேசி வருகின்றனர். இதுபோன்ற நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பெயரையும், புகழையும், வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் புதுச்சேரி வாக்காளர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பணம் கொடுத்ததாக ஆதாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் அவதூறானது.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மைக்கு புறம்பான செய்தியை உடனடியாக சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Next Story