காரைக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கல்லூரியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு


காரைக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கல்லூரியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 April 2019 10:15 PM GMT (Updated: 23 April 2019 7:15 PM GMT)

காரைக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தலின் போது 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 3,712 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இது தவிர மானாமதுரை (தனி) தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 321 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பாதுகாப்பு அறைகள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்கும் மேல் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க வேண்டிய நிலை உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த கல்லூரியை சுற்றிலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைக்கு முன்பு 2 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேர தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கல்லூரியை சுற்றிலும் 15–க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

3 நாட்களுக்கு ஒரு முறை கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இங்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இது தவிர சப்–கலெக்டர் தலைமையில் தினந்தோறும் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரியின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு சி.சி.டி.வி கேமரா பதிவுகள் 24 மணி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனை அந்தந்த கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் அங்கேயே தங்கியிருந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் அலுவலர்கள் அலுவலக வேலை சம்பந்தமாக உள்ளே செல்ல வேண்டுமானால் நுழைவு வாயிலில் அவர்கள் குறித்த விவரம் முழுவதும் சேகரிக்கப்பட்டு அவர்களை தீவிரமாக போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே எந்த நபர்களுக்கும் அனுமதி இல்லை.

இதேபோல் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தேர்தலில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வேறு மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தபால் வாக்கு பெட்டிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அறையின் முன்புறம் மற்றும் பின்புறமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:–

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் அளிக்கலாம். இதுபோல் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வேறு மாவட்டத்தில் அரசு துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் அளிக்கலாம். இதன் அடிப்படையில் தற்போது தபால் வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கலெக்டர் அறையில் வைக்கப்பட்டுள்ளன.

தினசரி மாலை 3 மணியளவில் தபால் வாக்குகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சேரும். அந்த சமயத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் பெட்டியில் போடப்படும். அத்துடன் எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்ற விவரமும் பதிவேட்டில் குறிக்கப்படும். இதுபோல் காரைக்குடியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் தினசரி அதிகாரிகள் பார்வையிடுவார்கள். மேலும் வாக்காளர்களின் முகவர்கள் இந்த நடவடிக்கையை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story