பவானி அருகே 2 சொகுசு பஸ்கள் மோதி விபத்து 16 பயணிகள் காயம்


பவானி அருகே 2 சொகுசு பஸ்கள் மோதி விபத்து 16 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே 2 சொகுசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் காயம் அடைந்தனர்.

பவானி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று காலை ஒரு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள லட்சுமிநகரில் சென்றபோது இந்த பஸ்சும் அதன் பின்னால் வந்து கொண்டிருந்த சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று சத்தம் போட்டனர்.

2 பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி 16 பேர் காயம் அடைந்தார்கள். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் கோவையை சேர்ந்த கன்னியப்பன் மற்றும் 2 பஸ்களில் இருந்த பயணிகள் கோவை கணபதி பகுதியை சேர்ந்த கவியரசன் (27), அவருடைய மனைவி சோனா (23), கோவைபுதூரை சேர்ந்த பாலாஜியின் மனைவி ரேவதி (43), கோவை ராமபுநாதன்புதூரை சேர்ந்த சிவக்குமார் (52), திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் மனைவி சாவித்திரி (55), கோவையை சேர்ந்த சென்னகிருஷ்ணனின் மகன் விஷ்ணு (32) ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர்.

இந்த விபத்தால் சேலம்–கோவை பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். சுமார் 20 நிமிடத்துக்கு பிறகே போக்குவரத்து நிலமை சீரானது.

மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story