ஆசாரிபள்ளம் அருகே புதிய பாலத்தை 3 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் அதிகாரிகளிடம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


ஆசாரிபள்ளம் அருகே புதிய பாலத்தை 3 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் அதிகாரிகளிடம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2019 10:30 PM GMT (Updated: 27 April 2019 8:22 PM GMT)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே கட்டப்பட இருக்கும் புதிய பாலத்தை 3 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தை அடுத்த பெருஞ்செல்வவிளை செல்லும் சாலையில் பழைய பாலம் ஒன்று இருந்தது. இந்த பாலம் குறுகியதாக இருப்பதால் இதனை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று அதிகாரிகள், அதே பகுதியில் ரூ.96 லட்சம் செலவில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கினர்.

இதையடுத்து பெருஞ்செல்வவிளையில் உள்ள பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. பழைய பாலத்தை இடித்து அகற்றிய பின் அங்கு புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. இச்சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள், மற்ற இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இடிக்கப்பட்ட பாலத்தின் அருகே மக்கள் பயன்படுத்த தற்காலிக பாலமும் அமைக்கப் படவில்லை.

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு

இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று பெருஞ்செல்வவிளை பகுதியில் சென்று புதிய பாலம் கட்டப்படும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் இதுபற்றி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருஞ்செல்வவிளை பகுதியில் கட்டப்பட இருக்கும் புதிய பாலம் 5 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே 3 மாதங்கள் ஆகி விட்டதால் பாலப் பணியை துரிதமாக தொடங்கி முடிக்க வேண்டும் என்றும், புதிய பாலத்தை 3 மாத காலத்தில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். கட்டுமான பணிக்கான தாமதம் பற்றி கேட்ட போது, அப்பகுதிகளில் பாறைகள் அதிகம் இருப்பதால் கட்டுமானப்பணி தாமதம் ஆவதாக தெரிவித்தனர். எனவே புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தற்காலிக பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story