சூலூர் தொகுதி இடைத்தேர்தல், தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் - துரைமுருகன் பேச்சு


சூலூர் தொகுதி இடைத்தேர்தல், தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் - துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று துரைமுருகன் பேசினார்.

சூலூர்,

சூலூர் திருச்சி சாலையில் உள்ள ஆறுபடை கோவில் அருகே நேற்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. கோவை நகர பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கபிலன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பி.வி.மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அரசுகளை ஒரே நேரத்தில் தூக்கி எறியக்கூடிய தைரியம் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இருந்தது. இந்த தைரியமானது, அண்ணாவிடம் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது அந்த தைரியம் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. மத்தியில் யார் பிரதமராக வேண்டும் என்றும், மாநிலத்தில் யார் ஆள வேண்டும் என்றும் நிர்ணயிக்கக்கூடிய சக்தி மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 37 இடங்களில் நமது தி.மு.க. கூட்டணியானது வெற்றிப்பெறும். மேலும் நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தனது சக்தியை நிரூபிக்கும்.

மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை வெற்றிபெற செய்யுங்கள். தோல்வி பயத்தால் சபாநாயகர் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அது மட்டும் இல்லை எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கவும் துணிந்துவிட்டார்கள். இவை அனைத்தும் அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது.

கோவை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் பணத்துக்கு மோசம் போக மாட்டார்கள். எனவே உங்களது சூலூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளரும், மக்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவருமான பொங்கலூர் நா.பழனிசாமியை 50 ஆயிரத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதி மக்கள் அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கொங்கு மாநில தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைசாமி, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஆதி தமிழர் பேரவை அதியமான், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பெரியார் திராவிடர் கழகம், திராவிட கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயகம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.

Next Story