தொழிலாளர் தினத்தில் 10 பெண்கள் உயிரை காப்பாற்றிய சரக்கு வேன் டிரைவர்


தொழிலாளர் தினத்தில் 10 பெண்கள் உயிரை காப்பாற்றிய சரக்கு வேன் டிரைவர்
x
தினத்தந்தி 1 May 2019 10:45 PM GMT (Updated: 1 May 2019 8:07 PM GMT)

தொழிலாளர் தினத்தில் 10 பெண்கள் உயிரை காப்பாற்றிய சரக்கு வேன் டிரைவர் மாரடைப்பால் இறந்த பரிதாபம்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் மேற்கு, பனங்குளம், குளமங்கலம் பகுதி கிராமங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் வயல் வேலைக்கு செல்வார்கள். பல கி.மீ. தூரம் வரை வயல் வேலைகளுக்கு செல்லும் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சரக்கு வேனில் சென்று வருகின்றனர். தொழிலாளர் தினமான நேற்று வழக்கம் போல கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 10 பேர் கீரமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலைக்கு செல்ல புறப்பட்டனர். அவர்கள் கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் சரக்கு வேனில் சென்றனர். சரக்கு வேனை அன்பழகன் ஓட்டினார். சரக்கு வேன் அம்புலி ஆற்று பாலம் அருகே சென்ற போது, அன்பழகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நிலை தடுமாறிய நிலையிலும் சரக்கு வேனை நிறுத்தி விபத்து ஏற்படாமல் பெண் தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றி உள்ளார். இந்தநிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அன்பழகன் முகத்தில் பெண் தொழிலாளர்கள் தண்ணீர் தெளித்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அதே சரக்கு வேனில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களான எங்கள் உயிரை காப்பாற்றி விட்டு தன் உயிரை அன்பழகன் விட்டுள்ளார் என்று கூறி பெண்கள் கதறி அழுதனர். 

Next Story