இடங்கணசாலையில், கழிவுகளை அகற்ற கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


இடங்கணசாலையில், கழிவுகளை அகற்ற கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 May 2019 10:30 PM GMT (Updated: 2 May 2019 8:31 PM GMT)

இடங்கணசாலையில் கழிவுகளை அகற்ற கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வார்டு செட்டியார் தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பொது கழிவறை உள்ளது. அந்த கழிவறையின் செப்டிக் டேங்கில் கழிவுகள் நிரம்பியதால் அப்பகுதி மக்கள் கழிவுநீரை அகற்ற கோரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனைதொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தினர் தனியார் செப்டிக் டேங்க் கிளனர்களை கொண்டு அகற்றினர் அப்போது ஒரு சில டேங்குகளில் மட்டும் கழிவுநீரை அகற்றியதாகவும் மீதி இருந்த கழிவுகளை பொது கழிப்பிடத்தின் அருகே உள்ள குட்டை பகுதியில் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசீயது மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரனிடம் இதுகுறித்து கூறினர். அதனை கேட்ட செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கழிவுகளை அகற்ற கோரி நேற்று இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story