சிறுதொழில் கடனுக்கு செலுத்திய முன்பணத்தை திருப்பிக்கேட்டு - தொண்டு நிறுவனத்தை பெண்கள் முற்றுகை


சிறுதொழில் கடனுக்கு செலுத்திய முன்பணத்தை திருப்பிக்கேட்டு - தொண்டு நிறுவனத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிறுதொழில் கடனுக்காக செலுத்திய முன்பணத்தை திருப்பித்தரக்கோரி தொண்டு நிறுவனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தை, நேற்று சுய உதவிக்குழு பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மேலும் கடனுதவி வழங்குவதாக கூறி தங்களிடம் பெற்ற முன்பணத்தை திருப்பித்தர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஏழைப்பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறுதொழில் கடனுதவி வழங்குவதாக அந்த தொண்டு நிறுவனம் அறிவித்தது. மேலும் வட்டியில்லாமலும், மானியத்துடனும் ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இதை நம்பி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கடனுதவி கேட்டு இந்த தொண்டு நிறுவனத்தில் விண்ணப்பித்தோம்.

அப்போது குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறினர். இதனால் ஒவ்வொருவரும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை செலுத்தினோம். ஆனால், இதுவரை கடனுதவி வழங்கவில்லை. இதுகுறித்து தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே நாங்கள் செலுத்திய தொகையை திருப்பி கேட்டோம். அதையும் தராததால் முற்றுகையிட்டோம் என்று கூறினர்.

இதையடுத்து முறையாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், பணத்தை திரும்ப தரும்வரை வரை முற்றுகையை கைவிடமாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story