23-ந் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்வார், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவது உறுதி -அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


23-ந் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்வார், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவது உறுதி -அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 7 May 2019 10:00 PM GMT (Updated: 7 May 2019 5:34 PM GMT)

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்வார், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருது உறுதி என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையத்தில் திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசியதாவது:-

வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக உங்களை தேடி, நாடி நான் வந்திருக்கிறேன். ஏதோ தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க அல்லது வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக உங்களை தேடி வரக்கூடிய உணர்விலே என்றைக்கும் இல்லை. உங்களுடைய பிரச்சினைகளை பொறுப்பில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக கருதி உங்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு மாபெரும் இயக்கம் தான் தி.மு.க. என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த உணர்வோடு தான், அந்த உரிமையோடு தான் உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்க வந்திருக் கிறேன்.

ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நம்முடைய கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணிக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவை தந்து சிறப்பான வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது உண்மை தானே. அதில் சந்தேகமில்லையே. தப்பித்தவறி வேறு யாருக்கும் ஓட்டுப்போடவில்லையே. கை சின்னத்திற்கு தானே ஓட்டு போட்டீர்கள் (அப்போது அங்கிருந்தவர்கள் ஆமாம்... ஆமாம்... என சத்தம் எழுப்பினர்).

கை சின்னத்திற்கு வாக்குகள் வழங்குகிற நேரத்தில் மத்தியில் இருக்கக் கூடிய மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு ஆதரவு தந்தீர்கள். அதுபோல தமிழகத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு காண வேண்டும் என்று சொன்னால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும். ஏற்கனவே இந்த அரவக்குறிச்சி தொகுதி என்பது ஓராண்டு காலத்திற்கு மேலாக ஒரு அனாதை தொகுதியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இல்லாத தொகுதியாக இருந்து வந்தது உங்களுக்கு தெரியும்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் பதவியை பறித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால் முதல்-அமைச்சராக இருக்க கூடிய பழனிசாமி ஊழல் நிறைந்தவராக இருக்கிறார். லஞ்சம் வாங்குகிற முதல்-அமைச்சராக இருக்கிறார், மக்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார், எனவே அவரை மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் ஒருவர் தான் செந்தில்பாலாஜி. அதனை கொடுத்ததற்காக 18 பேரின் பதவி பறிக்கப்பட்டது. அதனால் இந்த இடைத்தேர்தல் வந்து சேர்ந்திருக்கிறது. ஆகவே உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று சொன்னால். உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து செந்தில்பாலாஜியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

மத்தியில் உள்ள மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்த நல்ல ஆதரவை நாடாளுமன்ற தேர்தலில் தந்துள்ளர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமால் இந்தியாவில் நடைபெற்று முடிந்திருக்கிற தேர்தலாக இருந்தாலும், இன்னும் நடைபெற வேண்டிய தேர்தலாக இருந்தாலும் அதன் மூலமாக மோடி நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல எடப்பாடி பழனிசாமியும் வருகிற 23-ந்தேதி வாக்குகள் எண்ணுகிற நேரத்தில் அவரும் வீட்டுக்கு போக வேண்டிய சூழலை ஏற்படுத்தி தந்திட வேண்டும்.

மோடி ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடைகிற நேரத்தில் அவர் வீட்டுக்கு போவது இயற்கையாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி என்பது இன்னும் 1¾ ஆண்டு காலம் இருக்கிறது. பிறகு எப்படி வீட்டிற்கு போக முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்கு நான் ஒரு விளக்கத்தை சொல்கிறேன். இந்த அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டி இல்லாத நிலையிலே, மைனாரிட்டியாக இருக்க கூடிய ஆட்சி தான். 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய காரணத்தினால் தான் இதுநாள் வரை அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருக்கிறது. ஆனால் இனிமேல் அதற்கு வாய்ப்பு இருக்காது என்பது தெளிவாக தெரி கிறது.

கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போகிறோம். அதுபோல தான் 18 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. தான் வெற்றி பெற போகிறது.

வருகிற 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் உறுதியாக தி.மு.க. தான் வெற்றி பெறப்போகிறது. ஆக 22 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு வருகிறார்கள். ஏற்கனவே நம்மோடு கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என சேர்த்தால் மொத்தம் 97 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். இதோடு 22 எம்.எல்.ஏ.க்களையும் கூட்டினால் மொத்தம் 119 வருகிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னால் மொத்தம் 234 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் ஒரு சீட் இருந்தால் மெஜாரிட்டி போதும். ஆக 119 நாம் வந்து விடுகிறோம். மெஜாரிட்டிக்கு 118 தான் தேவை. ஆக 119 வருகிற காரணத்தினால் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. தான் ஆட்சிக்கு வருகிறது. இந்த உண்மை ஆளும் கட்சியில் இருக்க கூடியவர்களுக்கு தான் தெளிவாக தெரியும்.

அப்படி தெரிந்திருந்த காரணத்தினால் தான் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். 234 எண்ணிக்கையில் 3 எண்ணிக்கையை குறைத்தால் மீண்டும் ஆட்சியில் நீடிக்கலாம் என்று கருதி, 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க சபாநாயகர் கடிதம் அனுப்பினார். இந்த சூழ்ச்சியை நான் தெரிந்து கொண்டேன். உடனடியாக சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உங்கள் மீது எம்.எல்.ஏ.க்களாகிய நாங்கள் நம்பிக்கை இழந்திருக்கிறோம். உங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறோம்’ என கடிதம் அனுப்பினேன். இதனால் அவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இருக்கும் போது அதை சரி செய்தால் தான் அதற்குரிய சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கைக்குரிய வாக்கெடுப்பு நடத்திய பின்பு தான் அவர் மற்ற பணிகளில் ஈடுபட முடியும். அது தான் நடைமுறை.

இதற்கிடையே விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்ததில், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்கள் போட்ட சூழ்ச்சிக்கு நான் ஒரு ஆப்பு வைத்தேன். அதன் காரணமாக இந்த சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது இருக்கிற ஆட்சி எதையும் மீறுவார்கள். எந்த எல்லைக்கும் போவார்கள். சட்டத்தை மதிக்க மாட்டார்கள். எனவே இதையெல்லாம் தூக்கி போட்டு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அதுவும் தற்போது நடக்காது. காரணம் இதுவரை பிரதமராக மோடி இருந்தார். ஆனால் 23-ந் தேதிக்கு பிறகு மோடி அல்ல ராகுல்காந்தி அங்கு பிரதமராக வரப்போகிறார்.

இந்த தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே தேர்ந்தெடுத்த செந்தில்பாலாஜியை மீண்டும் தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு பணிகளை உங்களுக்காக நிறைவேற்றி தர அவர் காத்திருக்கிறார். கரூர் ஊராட்சி ஒன்றியம் புகளூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் படும். அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றில் புதிய கிணறு அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

உறத்தை, தளவாய்பாளையம், கோவிந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் நதி நீரேற்று பாசனங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து, வாய்க்கால் தூர்வாரப்பட்டு விவசாய பணிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காகித புரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிற ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதேபோல தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். அதில் சிலவற்றை குறிப்பிட்டு சொல்கிறேன்.

கிராமப்புற மகளிருக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கி சிறு சிறு தொழில்கள் தொடங்கிட அந்த திட்டம் நிறைவேற்றப்படும். 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர்கள் பணி வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் வேலை வழங்கப்படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கட்டுப்படுத்தப்படும். இதனை ஏற்கனவே மத்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தியும் அவர்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு பெண்கள், தாய்மார்கள் அதிக அளவில் வந்துள்ளர்கள். அதற்கு ஒரே ஒரு கொள்கை தான். மோடி ஆட்சி ஒழிய வேண்டும், எடப்பாடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் இங்கே திரண்டிருக்கிறீர்கள்.

டி.வி.க்களுக்கு கேபிள் கட்டணம் தற்போது ரூ.300 வசூலிக்கப்படுகிறது. கலைஞர் காலத்தில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கேபிள் கட்டணத்தை குறைத்து கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்த கட்டணம் கொண்டு வரப்படும். நிலமற்ற ஏழை, விவசாய குடும்பத்தினர் வறுமையின் காரணமாக அடமானம் வைத்த 5 பவுன் வரை உள்ள தங்க நகை கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்படும். அனைத்து விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்கள் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

செந்தில்பாலாஜி ஒரு அருமையான திட்டத்தை அறிவித்திருக்கிறார். அரவக் குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு 3 சென்ட் வீட்டு மனை நிலம் இலவசமாக வழங்க உறுதியை எடுத்துள்ளார். அதற்கான ஆயத்த பணிகளில் படிவங்கள் வழங்கப்பட்டு முழுமையாக ஈடுபட்டுள்ளார். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலாக கொண்டு வந்தது கலைஞரின் ஆட்சி காலத்தில் தான். கலைஞர் வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அந்த திட்டத்திற்கு கலைஞர் என்ற பெயர் இருக்க கூடாது என்ற அரசியல் நோக்கத்தோடு, ஓரவஞ்சனையுடன், கலைஞர் பெயரை நீக்கி பசுமை வீடுகள் கட்டும் திட்டம் என அறிவித்தார்கள். தி.மு.க. ஆட்சி காலத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு 6.70 லட்சம் வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி அறிவித்துள்ள இந்த திட்டத்தை என்னிடம் எடுத்து சொன்ன போது, அரவக்குறிச்சி மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றிட வேண்டும் என்ற அந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியை உருவாக்கி தரக்கூடிய காலத்தில் நிச்சயமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றிட நாம் பொறுப்புக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் பலர் வாக்குறுதிகளை சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். இதற்கு மோடி ஒருவரே சாட்சி. மோடி கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்றார். ஆக 5 வருடத்தில் 10 கோடி பேருக்கு வேலை என்றார்.

இங்கே இருக்கிற படித்த பட்டதாரிகள் கையை உயர்த்தி காட்டுங்கள் உங்களுக்கு பிரதமர் அறிவித்த வேலை வாய்ப்பு வந்துள்ளதா?. (அப்போது கூட்டத்தில் இருந்த பட்டதாரிகள் கைகளை உயர்த்தி வரவில்லை என சத்தம் எழுப்பினர்). இதேபோல தான் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டு வந்து இந்தியாவில் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால் யாருக்காவது போடப்பட்டுள்ளதா? இல்லை. ரூ.15 ஆயிரம்.... அல்லது ரூ.15... அல்லது 15 காசு... அதுவும் இல்லை. இது தான் அவர்கள் வாக்குறுதி.

ஜெயலலிதாவின் மரணம் ஒரு மர்மமான மரணம். கோடநாட்டில் நடந்திருக்கிற அக்கிரமங்கள் பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசக்கூடாது என அவர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். நான் எல்லாம் பேசி முடித்து விட்டேன். கோடநாடு என்றால் தற்போது எல்லோருக்கும் தெரியும்.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்தி சென்று பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, அதனை காண்பித்து மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. கடந்த 7 வருடமாக நடந்தது குறித்து காவல்துறைக்கு இது தெரியாதா? உளவுத்துறைக்கு தெரியாதா? ஆனால் தெரிந்திருந்தும் அவர்களுக்கு பக்கப்பலமாக இருந்திருக்கிறார்கள். ஆளும் கட்சியினர் இதில் தலையீடு. குறிப்பாக துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரங்கள் வீடியோ வெளியே வந்துள்ளது. அதனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

பெரம்பலூரில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அங்குள்ள இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம் என சொல்லி ஓட்டலுக்கு வரவழைத்து வித, விதமாக படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நான் நேரில் சென்று கேட்டும் தமிழின தலைவர் கலைஞருக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்தனர். இந்த அயோக்கியர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? நான் உங்களை பார்த்து கேட்கிறேன். அதற்கு விடை சொல்லக்கூடிய, சரியான பாடத்தை வழங்க கூடிய நாள் தான் வருகிற 19-ந் தேதி. அன்றைய தினம் வாக்குச்சாவடிக்கு அனைவரும் வாருங்கள். செந்தில்பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவினை தந்து வெற்றியை தேடி தாருங்கள் என இரு கரம் கூப்பி, உங்கள் பாத மலர்களை தொட்டு கேட்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.அப்போது வேட்பாளர் செந்தில்பாலாஜி உடன் இருந்தார்.

இதேபோல புகளூர் கஸ்பா சர்க்கரை ஆலை நான்கு ரோடு சந்திப்பு, புன்னம் சத்திரம் பஸ் நிறுத்தம், குப்பம், அரியூர், நஞ்சை காளக்குறிச்சி, ராஜபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தொடர்ந்து 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர், வேலம்பாடி, இனுங்கனூர், பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர், ஆண்டிப்பட்டி கோட்டை ஆகிய இடங்களில் செந்தில்பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். 

Next Story