விருதுநகரில் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி; 4 வாலிபர்கள் கைது
விருதுநகரில் ஓட்டல் தொழிலாளி உள்பட 5 பேரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது62). சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 4 வாலிபர்கள் அவரை வழி மறித்தனர். அவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி தொழிலாளி சீனிவாசன் வைத்திருந்த 600 ரூபாயை பறித்தனர்.
மேலும் அந்த பகுதியில் வந்த ஆதவன், வினோத், நவீன்குமார், நந்தகுமார் ஆகியோரையும் மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டார்கள். இந்த சம்பவம் குறித்து ஓட்டல் காவலாளிகள் சூலக்கரை போலீசில் தகவல் கொடுத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாண்டீஸ்வரன்(22), மணிகண்டன்(22), சுந்தர மகாலிங்கம்(20), பாண்டியராஜன்(21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த 4 பேரும் விருதுநகர் அருகிலுள்ள ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர்கள்.