தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை ப.சிதம்பரம் பேச்சு


தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 11 May 2019 4:45 AM IST (Updated: 11 May 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

க.பரமத்தி, 

கரூர் மாவட்டம் க.பரமத்தி கடைவீதியில் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதற்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். இதில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

இதுவரை 6 முறை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைந்து இருக்கிறது. தற்போது 7-வது முறையாக அமைந்துள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றியை தேர்தலில் எட்டி பிடிக்கும். பா.ஜனதாவை எதிர்த்த மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தந்த கட்சி தற்போதைய அ.தி.மு.க. அல்ல. யார் முதல்-அமைச்சர் என 2 பேர் போட்டி போட்டனர். பின்னர் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து 2 பேரும் சேர்ந்து தற்போது தமிழகத்தை சூறையாடி விட்டார்கள்.

அ.தி.மு.க. அரசு என்று சொன்னவுடன், என்ன நினைவுக்கு வருகிறது தெரியுமா?. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தலைமை செயலாளர் அறையை சோதனையிட்ட சம்பவம், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆகியவை தான் நினைவுக்கு வருகின்றன. எனவே தமிழகத்தை ஏமாற்றிய அ.தி.மு.க. அரசை அப்புறப்படுத்த சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். டெல்லியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், தமிழகத்தில் உடனேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் முடிவுக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராவதிலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதிலும் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கான திட்டங்களை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடியும்.

அரியலூரை சேர்ந்த ஏழை தொழிலாளி மகள் அனிதா நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதால் அவர் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தில் கட்டிய அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டும் எனில் டெல்லி சார்பில் எதற்கு தேர்வு நடத்த வேண்டும். மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசுக்கு அடிமைகளா? என நினைக்க தோன்றுகிறது. ஆகவே தான் அனிதாவை நினைத்து தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து என்பதை சேர்த்துள்ளேன் என மதுரையில் ராகுல் காந்தி கூறினார்.

மாறாக நேற்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜவடேகர், பியூஸ் கோயல் ஆகியோர் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தொடரும், தமிழக அரசை அதனை ஏற்க வைப்போம் என சொல்கிறார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தார்கள். எங்களது மாணவர்களின் உரிமையை பறிக்க நீங்கள் யார்? என கேட்க திராணி இல்லாத தமிழக அமைச்சர்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? தற்போதைய தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் எம்.பி. வேட்பாளர் ஜோதிமணி, காங்கிரஸ் மாநில விவசாய அணி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story