இருவழி ரெயில்பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும்; ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தல்


இருவழி ரெயில்பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும்; ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 10:17 PM GMT)

தென்மாவட்டங்களுக்கான இருவழி ரெயில்பாதை திட்டப்பணியை விரைவுபடுத்த ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி, வாங்கி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் என 3 பிரிவுகளாக இருவழி ரெயில்பாதையாக மாற்ற ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வருகிற 2021–ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இருவழி ரெயில்பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்தது. முதல்கட்டமாக இந்த ரெயில் பாதையில் பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டப்பணி முழுவீச்சில் நடைபெறாமல் தாமதமாகவே நடந்துவருகின்றன. பாலங்கள் அமைத்தபின்பு நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் ரெயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டியநிலையில் திட்டமிட்டபடி 2021–ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணி முழுமையாக முடிவடைய வாய்ப்பு இல்லை. மேலும் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடும் போதுமான அளவில் செய்யப்படவில்லை.

இந்த இருவழி ரெயில்பாதை திட்டப்பணியில் மதுரை, விருதுநகர் ரெயில்நிலையங்களுக்கு இடையேதான் ரெயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கமுடியாமல் போகிறது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூட ரெயில் நிலையங்களில் தாமதப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை காரணமாக தான் கடந்த சில நாட்களுக்குமுன் 2 பயணிகள் ரெயில் ஒரே நேரத்தில் எதிரெதிரே இயக்கப்பட்ட சம்பவம் நடந்தது. எனவே விருதுநகர், மதுரை இடையே உள்ள ரெயில் பாதையை முன்னுரிமை கொடுத்து இருவழி ரெயில்பாதையாக அமைக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே ரெயில்வே அமைச்சகம் தென்மாவட்ட இருவழிரெயில்பாதை பணியை திட்டமிட்டபடி 2021–ம் ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பணிகளை விரைவு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரெயில்வே அமைச்சகம் அடுத்துவரும் நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டப்பணிக்கான முழுநிதியையும் ஒதுக்கீடு செய்யவேண்டியது அவசியமாகும்.


Next Story