தொட்டியம் அருகே அறநிலையத்துறை அதிகாரி சிறைபிடிப்பு


தொட்டியம் அருகே அறநிலையத்துறை அதிகாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 8:10 PM GMT)

தொட்டியம் அருகே அறநிலையத்துறை அதிகாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தொட்டியம்,

தொட்டியம் அருகே தோளூர்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை பல்வேறு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் திருப்பணிகள் செய்து நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பிரிவை சேர்ந்தவர்களால் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த ஊரை சேர்ந்த ஒருவர் இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என மனு அனுப்பி உள்ளார். இதனால் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தோளூர்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சென்று உண்டியலுக்கு சீல் வைத்தனர்.

நேற்று தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் போத்திசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் தோளூர்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது போத்திசெல்வி கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை அரசு கரூவூலத்திற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரியை சிறைபிடித்து, கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என மனு அனுப்பியவர் யார் என கேட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் உண்டியல் பணம் மற்றும் நகைகளை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த தங்கராசு மகன் ராஜ்குமார்(வயது 26) என்பவரை சில மர்ம நபர்கள் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில், ராஜ்குமாரை தாக்கிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி தோளூர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தொட்டியம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story