குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு: சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் முடிவு


குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு: சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 13 May 2019 10:15 PM GMT (Updated: 13 May 2019 8:56 PM GMT)

குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பது என பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை ஜெபமாலைபுரம் அருகே மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் குப்பைகள் நிரம்பிவிட்டதால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் தஞ்சை மாநகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம்பிரிக்கும மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பூக்கார விளார் சாலையில் உள்ள மாரிக்குளம் சுடுகாடு பகுதியில் குப்பைகள் தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு நேற்றுமுன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரத்தை வரவழைத்து மாரிக்குளம் சுடுகாட்டின் சுற்றுச்சுவரை 15 அடி நீளத்திற்கு இடித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் முடிவு செய்து இருந்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், மாரிகுளம் சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இன்னும் ஒரு வாரத்தில் மாநகராட்சியால் கட்டி கொடுக்கப்படும். குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ள இடத்தை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஒத்திவைப்பு

இந்த முடிவுகள் குறித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை பூக்கார விளார் சாலையில் நேற்றுகாலை நடந்தது. இதில் தமிழ்தேசிய பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், ராசு.முனியாண்டி, எஸ்.எம்.ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், ஜெயக்குமார், கலியபெருமாள், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும், இடிக்கப்பட்ட மாரிகுளம் சுடுகாட்டின் சுற்றுச்சுவரை கட்டி கொடுக்க வேண்டும். குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முயற்சி செய்தால் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Next Story