சத்தி புலிகள் காப்பகத்தில் வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது தாகம் தீர குடிக்கும் யானைகள்


சத்தி புலிகள் காப்பகத்தில் வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது தாகம் தீர குடிக்கும் யானைகள்
x
தினத்தந்தி 13 May 2019 10:30 PM GMT (Updated: 13 May 2019 9:25 PM GMT)

சத்தி புலிகள் காப்பக வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தாகம் தீர யானைகள் தண்ணீர் குடித்து வருகின்றன.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இங்கு மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது. குட்டைகளிலும் சிறிதளவு தண்ணீர் தான் தேங்கியுள்ளது.

இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிரை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. சில நேரம் வனக்குட்டைகளில் தேங்கிய சிறிதளவு நீரை குடித்து வருகின்றன. அந்த தண்ணீர் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் விலங்குகள் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அபாய நிலை நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வனக்கோட்டங்களில் 4 புதிய செயற்கை குட்டைகள் அமைத்து அதில் வாடகை லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. தினமும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்து நிரப்புகிறார்கள்.

தண்ணீர் அருகே குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் உப்புக்கட்டியும் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யானை உள்ளிட்ட விலங்குகள் கூட்டமாக வந்து குட்டைகளில் நிரப்பப்பட்ட தண்ணீரை தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. இதனால் வனவிலங்குகள் கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன.


Next Story