வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு தனிப்படை சோதனை தீவிரம்


வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு தனிப்படை சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயகரிசல்குளத்தில் நடந்த சோதனையில் பெண்கள் உள்பட 7 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்ததோடு அந்தப்பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது வெம்பக்கோட்டை பகுதியில்அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பது தங்குதடையின்றி நடந்து வருவதாகவும், கண்துடைப்புக்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் குவிந்தன.

இதனைதொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்த வேறு பகுதிகளில் உள்ள போலீசாரைக்கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. கிராமம் கிராமமாக சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோதைநாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விஜயகரிசல்குளம் கிராமத்தில் ஆலங்குளம் சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது பட்டாசு தயாரித்தாக பொன்னுபாண்டி(வயது50), மாரீஸ்வரன்(38), காமாட்சியம்மாள்(40), முத்துமாரியம்மாள்(41) ஆகியோரது வீட்டில் இருந்து தலா 20 கிலோ சரவெடி பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் நடத்திய சோதனையில் அழகுசாமி(40) என்பவரது வீட்டில் இருந்து 10 கிலோ சரவெடி மற்றும் 5 குரோஸ் கருந்திரி கைப்பற்றப்பட்டது. மேலும் ஜெயம்மாள் (38), ஜெயலட்சுமி (45) ஆகியோரும் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story