பங்களாப்புதூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; மக்காச்சோளம்– வாழைகள் நாசம்


பங்களாப்புதூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; மக்காச்சோளம்– வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 15 May 2019 10:15 PM GMT (Updated: 15 May 2019 9:08 PM GMT)

பங்களாப்புதூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோளம் மற்றும் வாழைகள் நாசம் ஆனது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், குரங்கு, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில், 2 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. இந்த யானைகள் பங்களாப்புதூர் அருகே உள்ள வனச்சாலை என்ற கிராமத்துக்குள் புகுந்தன. பின்னர் அதேப்பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 35) என்பவரின் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் சோளப்பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது.

அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு கனகராஜ் மற்றும் அக்கம் பக்கத்து விவசாயிகள் அங்கு சென்றனர். பின்னர் தோட்டத்தில் நின்று அட்டகாசம் செய்த யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாயிகளுக்கு போக்கு காட்டியது.

இதைத்தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் யானைகளை அங்கிருந்து விரட்டினார்கள். அதனால் அந்த யானைகள் அங்கிருந்து வெளியேறி அதேப்பகுதியை சேர்ந்த காளியம்மாள் (64) என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்து வாழைகளை முறித்து தின்றன. இதைத்தொடர்ந்து அந்த யானைகள் தானாகவே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, யானைகள் சேதப்படுத்திய வாழைகள் மற்றும் மக்காச்சோளம், சோளப்பயிர்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறி கடந்த 1 மாதமாக வனப்பகுதியையொட்டிள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பயிர்களை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகள் கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.


Next Story