தனியார் சிமெண்டு ஆலை நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீராணி ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் போராட்டம்


தனியார் சிமெண்டு ஆலை நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீராணி ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 10:26 PM GMT)

தனியார் சிமெண்டு ஆலை நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீராணி ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னநாகலூர் கிராமத்தில் உள்ள வீராணி ஏரியை காடு வளர்ப்பு என்ற பெயரில் ஒரு தனியார் சிமெண்டு ஆலை நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்ததோடு அல்லாமல் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை குவியலாக கொட்டி வைத்துள்ளதாகவும், மேலும் நீரோடை ஒன்றையும் ஆக்கிரமித்து அதில் சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, 100 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெற்று வந்த வீராணி ஏரி மற்றும் நீரோடையை மீட்டுத் தர வேண்டும், மண் குவியலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில், தமிழ்நாடு விவசாய சங்க அரியலூர் மாவட்டத்தலைவர் மணியன் மற்றும் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அறிவழகன், ராஜேந்திரன், கோடீஸ்வரன், ராமசாமி உள்பட பலர், வீராணி ஏரியில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கை விடுவதாக விவசாயிகள் அறிவித்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story