வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 4:15 PM GMT)

பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசம் ஆனது.

புஞ்சைபுளியம்பட்டி, 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் மான், யானை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் மரம், செடி–கொடிகள் காய்ந்து கருகி விட்டன. இதனால் வனவிலங்குகளை உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களில் புகுந்துவிடுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய வனப்பகுதியையொட்டிள்ள தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்வது தொடர்கதையாக வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி பவானிசாகர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள விவசாயி அப்புசாமி என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள வாழைகளை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்தது.

அப்போது ஒற்றை யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அப்புசாமி தோட்டத்துக்கு சென்றார். அங்கு யானை, வாழைகளை நாசப்படுத்திக்கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் அக்கம் பக்கத்து விவசாயிகளின் உதவியுடன், ஒற்றை யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் யானையை காட்டுக்குள் விரட்டி விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 1 மாதமாக விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறி கிராமங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர்களை உடைத்து தள்ளி சேதப்படுத்தி உள்ளது. இதேபோல் நேற்று இரவும் (நேற்று முன்தினம்) அந்த யானை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்து உள்ளது.

இதில் 100–க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமாகி உள்ளன. எனவே வாழைகளை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அகழிகள் அமைத்து யானைகள் கிராமங்களுக்குள் புகுந்துவிடாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story