ஈரோடு மாவட்டத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; சென்னிமலையில் மின்னலை பார்த்த அதிர்ச்சியில் 3 பெண்கள் மயக்கம்


ஈரோடு மாவட்டத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; சென்னிமலையில் மின்னலை பார்த்த அதிர்ச்சியில் 3 பெண்கள் மயக்கம்
x
தினத்தந்தி 18 May 2019 4:15 AM IST (Updated: 18 May 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சென்னிமலையில் மின்னலை பார்த்த அதிர்ச்சியில் 3 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. மாலை நேரங்களில் பலத்த சூறாவளிக்காற்று வீசுகிறது. இரவு நேரத்தில் மழை பெய்கிறது.

இந்தநிலையில் சென்னிமலை பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. நேற்று வாரச்சந்தை என்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது பயங்கர மின்னல் ஏற்பட்டது. இதனால் சென்னிமலை ஈங்கூர் ரோட்டை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி துளசிமணி (வயது 45), மருதுறை காளிவலசை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகள் அபிராமி (18) மற்றும் அபிராமியின் பாட்டி பழனியம்மாள் (55) ஆகியோர் மின்னலை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.

உடனே சந்தையில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னிமலை அருகே மேலப்பாளைத்தை சேர்ந்த குணசேகர் என்பவரின் மகன் கவுதம் (20) என்ற கல்லூரி மாணவர் தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் அருகில் இருந்த வீட்டின் சிமெண்டு கூரை உடைந்து பறந்து வந்து, கவுதம் மேலே விழுந்தது. இதில் அவருக்கு கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதேபோல் சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டு கூரை காற்றில் பறந்து சென்றது. சென்னிமலை பகுதியில் மின்னல்தான் அதிக அளவில் தாக்கியது. ஆனால் மழை பெய்யவில்லை.

சிவகிரி பகுதியில் கடந்த ஒருவாரமாக பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து மின்னல் அடிக்கிறது. ஆனால் மழை பெய்வதில்லை. வழக்கம்போல் நேற்று மாலை 5 மணியளவில் சிவகிரி, கந்தசாமிபாளையம், களிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கருமேகம் சூழ்ந்தது. சுமார் 30 நிமிடம் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. களிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சசிக்குமார் என்பவரின் தோட்டத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்தது.

மாலை 5.30 மணி அளவில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அதன்பின்னர் நின்றுவிட்டது. அதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை சுமார் 30 நிமிடம் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுரோடு என்ற இடத்தில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ரோட்டு ஓரத்தில் இருந்த ஒரு புங்கை மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் சத்தி-புளியம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

அந்தியூர், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுத்தது.

பின்னர் மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்தது. 5.30 மணி வரை காற்று, இடி-மின்னல் எதுவும் இல்லாமல் நல்ல மழை பெய்தது.

சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 5.15 மணி வரை லேசான மழை பெய்தது. அதன்பின்னர் நின்றுவிட்டது.

டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் லேசான மழை பெய்தது.

கொடுமுடி, ஊஞ்சலூர், கொளாநல்லி பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் சுமார் ஒரு 10 நிமிடம் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.

மொடக்குறிச்சி பகுதியில் மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையில் 10 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நம்பியூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

ஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்தது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தன.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை வேளையில் மழை பெய்வதுமாக காணப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிஅளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஈரோடு மாநகரமே புழுதி மண்டலமாக மாறியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது.

சுமார் 15 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த மழை பல்வேறு இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்தது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தன.

Next Story